Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 24 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.
அந்தச் சிறுமியை அவரது தந்தையே கடந்த சில காலங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமானார்.
இந்த அதிர்ச்சித் தகவல் வெளியே தெரிந்ததையடுத்து, நான்குநேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் கடந்த 7 மாதங்களாகத் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் வலுவான ஆதாரங்களும், மருத்துவ அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானது. அப்போது நீதிபதி சுரேஷ் குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:
பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே, அவரைச் சிதைப்பது என்பது சமூகத்தில் மன்னிக்க முடியாத மிகப்பெரிய கொடூர குற்றமாகும்.
மகளைக் கற்பழித்த குற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சமூகத்தின் அறநெறியைச் சீர்குலைப்பவை.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை (மரண தண்டனை) விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN