Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை தந்தை பெரியாராவது திறக்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
சமூகநீதியையும், அதன்வாயிலாக சமத்துவத்தையும் வலியுறுத்திய தந்தை பெரியாரின் 52-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புதல் உள்ளிட்ட துறைகளில் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டியும் தந்தை பெரியார் தான். சமூகநீதி வழிகாட்டியும் தந்தை பெரியார் தான். அதனால் தான் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் நாளில் மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1000 நாள்கள் ஆகியும் அதை செயல்படுத்தாத சமூக அநீதி திமுக அரசை கண்டித்து கடந்த ஆண்டு இதே நாளில் தான் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை நடத்தினோம்.
அந்தப் போராட்டம் நடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டாகி விட்டது; உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1365 நாள்களாகிவிட்டன. ஆனாலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அசைந்து கொடுக்க மறுக்கிறது திமுக அரசு. அதனால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 29-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.
தமிழ்நாட்டின் சமூகநீதி கண்களைத் திறந்தவர் தந்தைப் பெரியார். ஆனால், பாசிசக் கொள்கையிலும், அதிகாரத் திமிரிலும் மூழ்கித் திளைக்கும் திமுக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதிக் கண்கள் மூடி விட்டன. மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் தந்தை பெரியாராவது திமுக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களைத் திறக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam