Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 டிசம்பர் (ஹி.ச)
பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவ குணம் வாய்ந்த ஊட்டச்சத்து உணவாகும். மார்கழி, தை மாதங்கள் பனை கிழங்கு சீசனாக கருதப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் - குஞ்சையாபுரம், பெரியசாமிபுரம்,விருசம்பட்டி,வேடப்பட்டி மந்திகுளம், புளியங்குளம், முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, அச்சங்குளம்,விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேம்பார் - குஞ்சையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.
இதுகுறித்து பனைத்தொழிலாளர்கள் கூறுகையில்,
பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு 4 ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ 100 முதல் 125 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விளாத்திகுளம் பகுதியில் சுமார் 4000 பனைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலை மட்டுமே நம்பி வருகின்றனர், பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ள பனைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் சொற்பமான பனைத் தொழிலாளர்கள் மட்டுமே தற்போது பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், காரணம் என்னவென்றால், பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்க இப்பகுதியில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,
பனைத் தொழிலாளர்களுக்கான கடன் உதவி அரசு வழங்குவதில்லை, கருப்பட்டி, பனங்கற்கண்டு,பனங்கிழங்கு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து விலையை நிர்ணயிக்க வேண்டும்,தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது.
அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b