Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 24 டிசம்பர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கல்பலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி.
இவரது மகன் சந்தோஷ் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இரவு சிறுவன் சந்தோஷ் தனது பள்ளி நண்பர் கதிரவன் என்ற சிறுவனுடன் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கட்டடம் கட்டுவதற்காக மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அங்கு சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்து.
இந்த நிலையில், சிறுவன் சந்தோஷ் இயற்கை உபாதை கழித்து விட்டு திரும்பும் போது, திடீரென தவறி பள்ளத்தில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற கதிரவன் என்ற சிறுவன், செய்வதறியாது திகைத்தார். உடனடியாக ஓடிச் சென்று சந்தோஷ் குடும்பத்தினரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் சந்தோஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். பின்னர், தண்ணீரில் மிதந்த சிறுவனின் சடலத்தை மீட்கப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெமிலி காவல் துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், சந்தோஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நெமிலி போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக பாதுகாக்கப்படாமல் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN