Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 24 டிசம்பர் (ஹி.ச.)
சபரிமலையில் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ஊர்வலம் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு நாளைமறுநாள்(26-ந்தேதி) நண்பகல் பம்பா திரிவேணி சங்கமத்துக்கு வந்து சேருகிறது.
அன்று மாலை 3 மணிக்கு பிறகு பம்பா கணபதி கோவிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி, நீலிமலை மற்றும் அப்பாச்சி மேடு, சரங்குத்தியை கடந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதன்பிறகு தங்க அங்கி ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். மறுநாள் (27-ந்தேதி) மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே சபரிமலையில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டல பூஜைக்கு முன்னோடியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், காவல்துறை துறை சார்பிலும் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பவனி நடைபெறுவது வழக்கம்.
Hindusthan Samachar / GOKILA arumugam