Enter your Email Address to subscribe to our newsletters

திண்டிவனம், 24 டிசம்பர் (ஹி.ச.)
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயர் சூட்ட வேண்டும் என காங்கிர கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது;
சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரூபாய் 25 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீண்டகாலமாக திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. புதிய பேருந்து நிலையத்தை அமைக்கிற போது பழைய பெயரையே சூட்டுவது தான் மரபாகும். அந்த மரபை மீறுகிற வகையில் வேறொரு பெயரை சூட்டுவது எவ்வகையிலும் நியாயமல்ல. கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் அவர்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
1980 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று எந்த இந்திரா காந்தியை வரவேற்று முத்தமிழறிஞர் கலைஞர் உரையாற்றினாரோ அதை பெருமைப்படுத்துகிற வகையில், பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam