Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 டிசம்பர் (ஹி.ச.)
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அன்புக்கும் பொறுமைக்கும் கருணைக்கும் உலகம் முழுக்க அடையாளமாகத் திகழும் இயேசுநாதர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்ற வள்ளுவப் பெருந்தகை காட்டிய குறள் நெறியினைப் போலவே, அன்பின் வடிவாக நின்று, ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்ணத்தை காட்டுங்கள் என்று கூறியதோடு மட்டுமின்றி அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர் இயேசு பெருமான் அவர்கள்!
தமிழ்நாட்டில் உரிமைகளுக்காகவும், உள்ள கிறிஸ்தவ அவர்தம் சகோதரர்களின் வளர்ச்சிக்காவும் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரும் அரசாக நமது திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
கழக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படிதான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.
இயேசுபிரான் காட்டிய அன்பு வழி மற்றும் சகோதரத்துவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam