Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 24 டிசம்பர் (ஹி.ச.)
முன்னாள் முதல்வரும் அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்ஜிஆரின் 38வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 24) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மற்றும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், ரசிகர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று(டிசம்பர் 24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு 6 சீட்டு ஒதுக்கியிருப்பதாக செய்தி வெளியானது. அது வெறும் வதந்தி தான். இந்த தேர்தலில் அமமுகவை தவிர்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது. ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியலை நேரடியாக பார்த்தவன் நான். இன்றைக்கு நானே ஒரு அரசியல் இயக்கம் நடத்துகின்ற அளவிற்கு வந்திருக்கிறேன்.
இந்த வதந்தியை பரப்பியதால் எங்கள் தொண்டர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தன்மானத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், இந்த இயக்கம். வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி இந்த இயக்கம் 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது.
இந்த காலகட்டத்தில், எங்கள் இயக்கத்திற்கு எது நல்லதோ, அந்த முடிவை நான் எடுப்பேன். இது போல் வதந்திகள், இது போல பொய் செய்திகளை எல்லாம் கண்டுஅஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நாங்கள். அதனால் எங்களுக்கு எது தேவை? எங்களுக்கு எந்த கூட்டணி தேவை? என்பதை நாங்கள்முடிவு செய்வோம்.
எங்களை அணுகி தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அழைப்பது உண்மை. கூட்டணி உருவாக்க விரும்புகிற கட்சிகளும் எங்களை அணுகி கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பது உண்மை தான்.
எங்கள் கூட்டணி அறிவிப்பை தை பிறந்த பிறகு தான் சொல்வேன் என்று பலமுறை சொல்லிவிட்டேன்.
எனவே தயவு செய்து வதந்தியை பரப்ப வேண்டாம்
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b