Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 24 டிசம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிராவில் ‘மராத்தி’ தேசியத்தையும் இந்துத்துவா சிந்தனையையும் இணைத்து பால் தாக்கரே, ‘சிவசேனா’ எனும் அரசியல் கட்சி தொடங்கினார்.
1960களில் இருந்தே ‘மராத்தி’யர்களுக்கான மூத்த தலைவரான பால்தாக்கரேவின் சிவசேனா கட்சி இருந்து வருகிறது.
பால்தாக்கரே மறைவுக்குப் பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் தலைவரானார். பால் தாக்கரே காலத்திலேயே அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரே- சிவசேனாவின் அதிரடி முகமாக அறியப்பட்டவராக இருந்தார். தம்மை பால்தாக்கரேவின் அரசியல் வாரிசாக நினைத்துக் கொண்டார்.
ஆனாலும் உத்தவ் தாக்கரேவையே பெரியப்பா பால்தாக்கரே முன்னிறுத்தி தம்மை ஓரம் கட்டுவதாக அதிருப்தி அடைந்ததால் ராஜ்தாக்கரே, சிவசேனாவை விட்டு வெளியேறி 2006ம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தொடங்கினார்.
அப்போது முதல் இரு சகோதரர்கள் இடையே பகை நிலவி வந்தது. சமீபத்தில் அரசியல் ரீதியாக இருவருக்கும் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, மீண்டும் இணைய முடிவு செய்தனர்.
இதன்படி தான் ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேறி உள்ளார். மும்பை உட்பட மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளின் 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி 15ல், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் கட்சியும் ராஜ் தாக்கரேவின் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. இன்று (டிசம்பர் 24) உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் நேரில் சந்தித்து இதை அறிவித்துள்ளனர்.
20 ஆண்டுகால பகையை மறந்து சகோதரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தது மஹா அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் இருவரும் ஒன்றாக இணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய பேரணியை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b