Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 24 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கீழ்பென்னாத்தூர் ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலை இனி இல்லை, அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார்.
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மையம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க வழி செய்யும் மத்திய அரசு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விபத்து ஏற்படுத்தும் வகையிலும், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் நெடுஞ்சாலையின் நடுவே அமர வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திருவண்ணாமலை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் நட்டு வைக்கப்பட்டிருந்தது.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வந்ததும் அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அடிக்காதே அடிக்காதே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே, முடக்காதே முடக்காதே 100 நாள் வேலையை முடக்காதே, விடமாட்டோம் விடமாட்டோம், பாஜக மோடியின் சதி நிறைவேற விடமாட்டோம், 100 நாள் வேலையை முடக்க நினைக்கும் பாஜகவை, பிரதமர் மோடியை கண்டிக்கிறோம், எங்கே போனார் எங்கே போனார் பல்டி சாமி எங்கே போனார், எடப்பாடி பழனிசாமி எங்கே போனார், ஊர் மக்களை மறந்து விட்டு பதுங்கி குழியில் பதுங்கி போனார், குரல் கொடுத்தாயா குரல் கொடுத்தாயா ஏழை மக்களுக்காக குரல் கொடுத்தாயா, நய வஞ்சகத்திற்கு துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி துரோகியே உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்.
திரும்ப பெறு திரும்ப பெறு புதிய சட்டத்தை திரும்ப பெறு, ஒதுக்காதே ஒதுக்காதே விவசாய தொழிலாளர்களை ஒதுக்காதே என் பட உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கண்டன உரையாற்றிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுவையில்,
உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் 100 நாள் வேலை திட்டம் கிடையாது, கிராமப்புறத்து மக்கள் வேலையில்லாத நிலை மாறி அவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய நிலை 100 நாள் வேலை திட்டத்தால் ஏற்பட்டது. சென்னை பெங்களூர் என்று வேலை தேடி செல்லும் நிலை மாறி அவரவர் கிராமத்திலேயே வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. பெண்கள், முதியோர், ஊனமுற்றோருக்கு வேலை அளிக்கக்கூடிய 100 நாள் திட்டம் மூலம் அவர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர்.
இந்தியா முழுவதும் ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருமானத்தை தந்தது. அப்படிப்பட்ட திட்டத்தில் திட்டத்தை மோடி அரசு நிறுத்துவதற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN