Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன், 24 டிசம்பர் (ஹி.ச.)
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் முலிங் லா மலைப்பகுதி உள்ளது.
இது, நம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சி பிராந்தியத்துடன் இணைக்கும் பழங்கால வர்த்தக மற்றும் பயண பாதையாக இருந்தது.
இமயமலையில், 16,000 அடி உ யரத்துக்கு மேல் அமைந்துள்ள மலைப்பாதையான இந்த பகுதியை அடைய, தற்போது சாலை வசதி இல்லை.
ஆனால், நீலா பானியில் இருந்து மலையேற்றம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. முலிங் லாவை அடைய ஐந்து நாட்கள் ஆகும்.
இந்நிலையில், நீலபானி - முலிங் லா இடையே, 32 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளனர்.
நிறுவனங்களிடம், பி.ஆர்.ஓ., ஒப்பந்தம் கோரியுள்ளது. தேர்வாகும் நிறுவனம் மலை, பாறை, மண் வகை ஆகியவை எப்படி உள்ளது என ஆய்வு செய்து, எங்கு சாலை அமைக்கலாம், பனிச் சரிவு தடுப்பு ஆகியவை குறித்து அறிக்கை அளிக்கும்.
அதன் பின் சாலை பணிகள் துவங்கும். அனைத்து வானிலையிலும் திபெத் எல்லையை அடையும் வகையில் இந்த சாலையை கட்டமைக்க உள்ளனர்.
இதன் மூலம் சீன எல்லையில் அசாதாரண சூழல் நிலவும் போது, நம் படைகளை சில மணிநேரங்களில் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும்.
இது குறித்து பி.ஆர்.ஓ., அதிகாரிகள் கூறுகையில்,
லடாக்கில் சீன படைகளுடன் கடந்த 2020ல் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லைகளில் சாலை, பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நீலாபானி - முலிங் லா இடையே உயர்மட்ட மலைப்பாதை அமைக்க உள்ளோம். இமயமலையில் சாலை அமைக்கும் இந்த பணி மிக சவாலானதாக இருக்கும். என்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM