Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 24 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி கரையில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை காட்சிப்படுத்தும் பொருநை அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூ.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார். அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக் கூடம், சிவகங்கை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் என 54,296 சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று (டிசம்பர் 23) முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் அறிமுக கூடத்தில், 17 நிமிட திரைக்காட்சி மூலம் அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் விளக்கப்படுகின்றன.
சிவகளை அரங்கில், இரும்பு பயன்பாடு, உருக்கும் தொழில்நுட்பம், டிஜிட்டல் போர்டு மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லுார் அரங்கில், பண்டைய தமிழர்களின் வாழ்வியல், பயன்பாட்டு பொருட்கள் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளன. கொற்கை அரங்கில், பாண்டியர் கால கடல்சார் வணிகம், ரோமாபுரி தொடர்பு, முத்துக் குளித்தல் விவரிக்கப்படுகிறது. துலுக்கர்பட்டி அரங்கில், தமிழ் பிராமி உள்ளிட்ட எழுத்துகள் கொண்ட தொன்மை ஓடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
மேலும், பொருநை ஆற்றின் தொன்மை குறித்த, 7டி தியேட்டரில், 15 நிமிடங்கள் நடக்கும் காட்சியும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்திணைகள் குறித்த 5டி தியேட்டரிலும் மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
அருங்காட்சியகம் செயல்பட துவங்கிய முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் அருங்காட்சியகத்தை பார்வையிட வர பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என, 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு, 20 ரூபாய். பள்ளி மாணவர்களுக்கு, 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b