Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் அதன் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு கால்நடைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
அதை பரிசோதித்ததில் உயிரிழந்த பறவைகளுக்கு, எச்1, என்1 பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்து கிருமி நாசினிகள் தெளிக்க தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவர்களை அணுகவும் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b