Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் நாளை (26.12.2025) மற்றும் நாளை மறுநாள் (27.12.2025) ஆகிய நாள்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , முதலில் 26.12.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்று வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடனும், அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ள திட்டப் பணிகள் விபரம் பின்வருமாறு:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், முதல்வரின் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள், மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள், இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள், நியாயவிலைக் கடைகள் முதலான 100 கோடியே 80 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2525 திட்டப் பணிகள் திறந்துவைக்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 81 கோடியே 59 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டங்கள் திறக்கப்படுகின்றன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 கோடியே 19 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி 6 கோடியே 62 இலட்சம் மதிப்பீடு திறக்கப்படுகின்றன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு 1 கோடியே 95 இலட்சம் மதிப்பீடு திறக்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் திறக்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தாட்கோ சார்பில் கிராம அறிவு மையங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கான 386 கோடியே 48 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள்.
நலத்திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 1,045 கோடியே 41 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார்கள்.
அடுத்த நாள் 27.12.2025 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். அங்கு, மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெறும் அரசு விழாவில் 631 கோடியே 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 இலட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு 1400 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 12 கோடியே 17 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடம்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 30 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், 32 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய காய்கறி, பூ மற்றும் பழச் சந்தை வளாகம், 55 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் திருவண்ணாமலை மாநகரத்திற்கான குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், 60 இலட்சம் ரூபாய் செலவிலான கூடுதல் கட்டடம் மற்றும் 30 இலட்சம் ரூபாய் செலவிலான துணை சுகாதார நிலையம்;
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோயில் காவல் நிலையம்; அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், போளூர் ஊராட்சி ஒன்றியம், கஸ்தம்பாடியில் 22 கோடியே 62 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் இலங்கைத் தமிழர்களுக்கான 280 புதிய வீடுகள், குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள்;
உயர்கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 12 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 4 ஆய்வுக் கூடங்கள்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதிகள், போளூர், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூர், நாரையூர், மாமண்டூர், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், அரசுவெளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 22 கோடியே 73 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் கண்ணமங்கலம், மடம், ஆணைபோகி ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலக கட்டடம், புதிய ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள்;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-திருவத்திபுரம் சாலை ஆகிய இடங்களில் 161 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் இருவழித்தடத்திலிருந்து அகலப்படுத்தப்பட்ட நான்கு வழித்தட சாலைகள்;
நீர்வளத் துறை சார்பில், காமக்கூர் ஊராட்சி – கமண்டல நாகநதி, படிஅக்ரஹாரம் ஊராட்சி-செய்யாறு, செங்கம் நகரம்-செய்யாறு, மேல்கொடுங்கலூர் ஊராட்சி-சுகநதி, ரெட்டியார்பாளையம்-பாம்பானாறு, தொழுப்பேடு-செய்யாறு, அம்மாபாளையம் ஊராட்சி-நாகநதி ஆகிய இடங்களில் 35 கோடியே ஒரு இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், தண்டராம்பட்டு வட்டம்-ரெட்டியார்பாளையம் ஊராட்சி, சாத்தனூர் அணையில் 15 கோடியே 5 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.127 கோடியே 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், உயர்மட்டப் பாலங்கள் முதலிய 243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் 571 கோடியே 96 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 312 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகள் சார்பில் மொத்தம் 63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
நலத்திட்ட உதவிகள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண்மை பொறியியல் துறை முதலிய பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,400 கோடியே 57 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
Hindusthan Samachar / vidya.b