Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மருதமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக மருதமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரசி காலனியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை ஒன்று, தனது குட்டியை அங்கு யாரும் வசிக்காத வீட்டில் விட்டுவிட்டு சென்றது.
இதில், குட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தபோது அங்கு கருஞ்சிறுத்தை குட்டி தனியாக இருந்தது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கருஞ்சிறுத்தை குட்டியை பத்திரமாக மீட்டு கூண்டிற்குள் அடைத்தனர். தொடர்ந்து, குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதற்காக குட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதனுள் குட்டியை வைத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேற்று மதியம் முதல் கண்காணித்து வந்தனர். அப்போது நள்ளிரவு 1. 45 மற்றும் அதிகாலை 4.30 மணி அளவில் இரண்டு சிறுத்தைகள் குட்டி அருகே வந்து செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 4.30 மணிக்கு குகையில் இருந்து கருஞ்சிறுத்தை குட்டி வெளியேறியுள்ளது.
இந்நிலையில், வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட குகைக்கு அருகில் கருஞ்சிறுத்தை குட்டி அசைவில்லாமல் இருந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர், உயர் அதிகாரிகளுக்கும், வனக் கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், குட்டி உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து குட்டியின் உடலை பிரேதப்பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த அறிக்கை வெளியான பிறகே சிறுத்தைக் குட்டி உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்ட வந்த நிலையில் குட்டி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN