கடலூர் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
கடலூர், 25 டிசம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று (டிசம்பர் 24) இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளு
கடலூர் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில்  அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு


கடலூர், 25 டிசம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று (டிசம்பர் 24) இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் பகுதி அருகே வந்தபோது, பேருந்தில் டிரைவர் சீட்டின் கீழ் உள்ள டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையை தாண்டி எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து கரூர் மற்றும் திருச்சி நோக்கி வந்த 2 கார்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியதில், பல அடி தூரத்துக்கு கார்கள் தூக்கி எறியப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் 2 கார்களில் இருந்த கரூரை சேர்ந்த ராஜரத்தினம் (65), இவரது மனைவி ராஜேஸ்வரி(55), கார் டிரைவர் ஜெயக்குமார் (30), 3 வயது குழந்தை உள்பட 7 பேர் காரின் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலற்நிது ராமநத்தம் போலீசார் மற்றும் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் காரின் இடுபாடுகளில் இருந்து போராடி மீட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக 3 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விழுப்புரம் சரக டிஐஜி உமா, கடலூர் எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b