Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 25 டிசம்பர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்-புளியமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே உயர் மின்னழுத்த மின்கம்பிகளை தாங்கி நிற்கும் கம்பங்களில் பறவைகள் கூடு கட்டுதல், குரங்குகள் செல்லுதல் போன்றவற்றை தடுக்க பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் வலைகள் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த வலைகளில் இன்று (டிசம்பர் 25) காலை சுமார் 6.40 மணியளவில் திடீரென தீப்பற்றியது. வலைகள் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையறிந்த ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சென்னை-அரக்கோணம், அரக்கோணம்-சென்னை ரயில் மார்க்கங்களில் வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த ஊழியர்கள் தீயை போராடி அணைத்தனர். அதற்குள் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் வலைகள் எரிந்து சேதமானது. இதையடுத்து வேறு ஏதேனும் மின்னழுத்த கம்பிகள் மற்றும் சிக்னல் ஒயர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மின்கம்பிகளை சுமார் 8.15 மணியளவில் சீரமைத்தனர்.
இதற்கிடையில் தீவிபத்து ஏற்பட்டவுடன் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ்கள் ரயில்களை மாற்றுப்பாதை வழியாக சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டது. ரயில்கள் தாமதமானதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
தொடர்ந்து தீவிபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b