Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர் , 25 டிசம்பர் (ஹி.ச.)
ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. இதை ஒடுக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சக்காபட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று(டிசம்பர் 25) காலை பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் குறிப்பாக 69 வயதான முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் கணேஷ் உய்கே என்பவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒடிசாவில் நக்சல் இயக்கங்களை கணேஷ் உய்கே வழிநடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து டி.ஜி.பி. ஒய்.பி.குரானியா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதன்கிழமை 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, இன்று காலை 4 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட் குழு தலைவர் ஒருவர் கொல்லப்பட்டது ஒடிசா காவல்துறைக்கு ஒரு பெரிய வெற்றியாகும். இது மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்டுகளின் முதுகெலும்பை முறித்துள்ளது, என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b