கடலூர் திட்டக்குடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விகே சசிகலா
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.) கடலூர் திட்டக்குடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விகே சசிகலா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
Sasikala


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)

கடலூர் திட்டக்குடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விகே சசிகலா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் என்ற இடத்தில் அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிர்புறம் வந்த 2 கார்கள் மீது மோதியதில் இதுவரை 9 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும் அதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பதும் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க திமுக தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் தமிழகத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விளம்பர ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

இந்த விபத்தில் உயிரிழந்து இருப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ