Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (டிசம்பர் 25) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம்
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அமைதியுடனும், சகோதரத்துவ உணர்வுடனும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சில மாநிலங்களில் மதவாத கும்பல்கள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைச் சீர்குலைத்துள்ள சம்பவங்கள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கின்றன.
மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளுக்கு எதிராக, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் பேராபத்தாகும். பண்டிகை நாட்களில்கூட மதவெறியை விதைத்து, சமூக ஒற்றுமையை குலைக்கும் இத்தகைய செயல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
மதவாத கும்பல்களின் இந்த வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் அச்சமின்றி, பாதுகாப்புடன் தங்கள் பண்டிகைகளை கொண்டாட ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஆகியவை இந்தியாவின் அடையாளங்கள். அவற்றை சிதைக்கும் முயற்சிகளை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
மதவாத வன்முறைகளுக்கு எதிராக, அமைதியும் மனிதநேயமும் வெல்ல வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b