இந்திய அரசியலமைப்புக்கு எதிராகக் கிறிஸ்தவ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம் - தவெக ராஜ்மோகன்
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச) மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வன்முறைப் போக்கு - இந்திய அரசியலமைப்புக்கு எதிராகக் கிறிஸ்தவ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தவெக துணை பொதுசெயலாளர் ராஜ்மோகன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது
Rajmohan


Tw


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச)

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வன்முறைப் போக்கு - இந்திய அரசியலமைப்புக்கு எதிராகக் கிறிஸ்தவ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தவெக துணை பொதுசெயலாளர் ராஜ்மோகன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் பிளவுவாத பாசிச சக்திகளை மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்!

இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் மதச்சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில், புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிறிஸ்தவ மக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது பிளவுவாத சக்திகளால் நிகழ்த்தப்பட்டுள்ள மத நல்லிணக்கச் சீர்குலைவுச் சம்பவங்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கின்றன.

நமது நாடு அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு புண்ணிய பூமி. அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் கிறிஸ்துமஸ் நன்னாளில், வழிபாட்டுத் தலங்களிலும் பொது இடங்களிலும் அத்துமீறி நுழைந்து, வன்முறை அணுகுமுறைகளைக் கையாண்டு அச்சுறுத்துவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

எனவே, இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்க அரசு முன்வர வேண்டும்.

மதம் கடந்த மனிதநேயமே வலிமையான தேசத்தை உருவாக்கும். தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் மதச்சார்பின்மைக்கும் சமூக நீதிக்கும் உறுதுணையாக நிற்கும். பிளவுவாத அரசியலை முறியடித்து, மீண்டும் அமைதியும் சகோதரத்துவமும் தழைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ