Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று (25-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
பா.ஜ.க என்றாலே மதச்சார்புடைய கட்சி என்று ஒரு பொய் பிரச்சாரத்தை திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஒன்றாக தான் இருக்கிறோம். ஆனால், அரசியலுக்காக பிரித்து ஆள்கிறார்கள். மதவேற்றுமையை முதல்வர் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார். எந்த மாநில முதல்வரும் இதை செய்வது இல்லை. பிரதமர் இன்று தேவாலயத்துக்கு சென்றிருக்கிறார். என்றைக்காவது முதல்வர் கோயிலுக்கு வந்திருக்கிறாரா?
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம் மக்கள் என்று மரியாதை கொடுப்பது தான் உண்மையான ஆட்சியாளர்கள், உண்மையான அரசியல்வாதிகள், தலைவர்கள். ஆனால், தொடர்ந்து நீங்கள் ஒரு வேற்றுமையை விதைத்து இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கிறிஸ்துமஸ் விழாவிலாவது நீங்கள் திருந்துங்கள். அதே போல் எப்போதும் சனாதனத்தை ஒழிப்பேன், நானும் கிறிஸ்துவர்கள் தான், இந்து மதம் வேற்றுமையை விதைக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் சும்மா உளறிட்டு இருக்க வேண்டாம் என அவருக்கு அறிவுரை கூறுகிறேன். நீங்கள் துணை முதல்வர் எல்லோருக்கும் சமமானவர்கள். நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம். ஆனால், எங்கள் மதச்சார்பின்மையாளர்களாக இல்லாமல் மதச்சார்புடையவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் மீது பழியை சுமத்துகிறார்கள். அவர்கள் தான் மதச்சார்பின்மையாளர்களாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு மதச்சார்புடையவர்களாக இருக்கிறார்கள்.
125 நாள் வேலை வாய்ப்பை எதிர்ப்பதற்கு திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. ஒரு பக்கம் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பக்கம் செவிலியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் போராட வைத்துவிட்டு 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு எடுத்துவிட்டது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
அந்தந்த கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது அவர்கள் உரிமை. ஆனால், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்தியவர்களாக இருக்கிறோம். அதனால் நான் தம்பி விஜய்க்கு மறுபடியும் சொல்கிறேன், நீங்கள் தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் இணைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். அதனால் வீணா போயிடாதீங்க என்று கோரிக்கை வைக்கிறேன். எல்லோரும் சேர்ந்து திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b