Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய சங்கத்தின் நிர்வாகி மௌலானா சம்சுதீன் காசிமி கூறியதாவது,
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா சென்று வருகின்றனர். அவர்களில் சுமார் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும், 52 ஆயிரம் பேர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஹஜ் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் பயணம் செய்யும் பயனாளர்கள் மே மற்றும் ஜூன் மாதம் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு வரை தங்களுடைய பயணத்தை பதிவு செய்து பயணத்தை தொடங்குவார்கள். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு மத்திய அரசு, ஹஜ் காலத்திற்கு சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே, அதாவது அடுத்த மாதம் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பயனாளர்கள் தங்களுடைய ஹஜ் பயண பதிவை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன் பிறகு பதிவு செய்பவர்கள் இந்தப் பயணம் மேற்கொள்ள இயலாது என்றும் தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த தகவல் தெரியாததால் இதுவரை தங்களது பயணத்தை பதிவு செய்வதில் கவனக்குறைவாக இருந்து வந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் பெயர் பட்டியல் இந்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
முறைகேடுகளையும், போலிகளையும் தவிர்ப்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு சென்னை நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதற்கு தமிழக முதலமைச்சருக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
என்று மௌலானா சம்சுதீன் காசிமி தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN