Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 25 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாய் பவுனு அம்மாளுக்கு உடல் நலக் குறைவு காரணமாக காரில் விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 25) அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
இந்த காரில், சக்திவேல் மனைவி கனகவல்லி, சக்திவேலன் சகோதரர் கோவிந்தராஜ், அவரது மாமனார் கலைவாணன் ஆகியோர் உடன் சென்றனர். காரை கோவிந்தராஜ் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. காரானது திருவண்ணாமலை அருகே உள்ள ராஜந்தாங்கல் பகுதியில் உள்ள விழுப்புரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென கட்டுபாட்டை இழந்த கார் சாலையின் எதிர் திசையில் மாறி சென்று எதிரே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதியில் கார் சிக்கிய நிலையில், சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. இந்த விபத்தில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் மற்று அவசர ஊர்தி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்த கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கலைவாணன் மற்றும் பவுனு அம்மாள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிந்தராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த கனகவல்லியின் உடல் பிரேத பரிசோதனைக்காக இதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருண்ணாமலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தில் மட்டுமின்றி ஊரிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN