Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 25 டிசம்பர் (ஹி.ச.)
மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று (டிசம்பர் 24) மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்றது. அப்போது பேருந்தின் முன்பக்கம் வலது புறம் இருந்த டயர் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தறிக்கெட்டு தாறுமாறாக ஓடத்தொடங்கி உள்ளது.
இதில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறிய பஸ் மறுமார்க்கத்தில் சென்னை-திருச்சி சாலையில் பாய்ந்தது. அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற 2 கார்கள் மீது மோதி சாலையோர பள்ளத்திற்குள் பேருந்து பாய்ந்து நின்றது. இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் கூச்சலிட்டனர்.
அவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். பேருந்து மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் சிக்கி இருந்தவர்கள் காப்பாற்றுமாறு குரல் எழுப்பினார்கள். இதை பார்த்தவர்கள் ஓடோடி வந்து மீட்க முயன்றனர் ஆனால் கார்களுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் , மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர், சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒரு குழந்தையும், முதியவரும் உயிரிழந்தனர். இதன் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேர் கவலைகிடமான நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசாரால் இறந்தவர்கள் குறித்த விவரத்தை கண்டுபிடித்தனர். இதன்படி விபத்தில் சிக்கிய ஒரு காரில் வந்தவர்கள் கரூர் சின்ன ஆண்டான் கோயில் சுப்பையா பிள்ளை லே-அவுட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜரத்தினம்(வயது 67), அவரது மனைவி ராஜேஸ்வரி(57), கார் டிரைவரான ஜெயக்குமார்(30) என்பதும் தெரியவந்தது.
இதேபோல் அரசு பேருந்து மோதிய மற்றொரு காரில் திருச்சி திருவரம்பூர் காட்டூரை சேர்ந்த ஒரே குடும்பமான முகமது பாரூக்(45), அவரது மனைவி ரிபானா(33), அவரது மகள் தாஜ்பிர்கா(10), மகன் அப்துல் பாத்தா(7), புதுக்கோட்டை பிள்ளை தண்ணீர் பந்தல் கலீப் நகர் சிராஜூதின் மனைவி குர்ஜீஸ் பாத்திமா(32), இவரது மகன் அஜீஸ் அகமது(3) என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விபத்தில் காயம் அடைந்து பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு பேர் விவரமும் தெரியவந்துள்ளது. இதன்படி பிள்ளை தண்ணீர் பந்தலை சேர்ந்த முகமது காசிம், அவரது மனைவி அமிஷா(52), சிராஜூதின் மகன்கள் அக்துல்அஜிஸ்(8), அப்துல் அஹர்(6) ஆகிய 4 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் காயமடைந்த முகமது காசிம் மகன் சிராஜூதின் என்பவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா சென்றுள்ளார். அவரை வழி அனுப்பு வதற்காக முகமது பாரூக் மற்றும் முகமது காசிம் குடும்பத்தினர் காரில் சென்னைக்கு சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் சிராஜூதினை வழியனுப்பி வைத்த அவர்கள் மீண்டும் அங்கிருந்து காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார்கள். அப்போது கார் டயர் வெடித்து விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்கள்.
Hindusthan Samachar / vidya.b