குற்றலா அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
தென்காசி, 25 டிசம்பர் (ஹி.ச) தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது இரண்டாம் கட்ட சீசனாக ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்
குற்றலா அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


தென்காசி, 25 டிசம்பர் (ஹி.ச)

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது இரண்டாம் கட்ட சீசனாக ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து ஜில்லென்று வரக்கூடிய தண்ணீரில் குளிப்பதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

மேலும் குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டு வருகின்றனர். தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் அருவிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் அருவிக்கரைகளை ஒட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b