Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 25 டிசம்பர் (ஹி.ச.)
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை, பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணியர் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால், ஊட்டியில் சுற்றுலா தலங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். அதேபோல், ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
நகரில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தொட்டபெட்டா, ஸ்பென்ஷர் சாலை, படகு இல்ல சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பிற இடங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள், லவ்டேல் சந்திப்பு பகுதியில் நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையான, மஞ்சனக்கொரை வழியாக திருப்பி விட்டனர். சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b