Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 25 டிசம்பர் (ஹி.ச.)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, அதன் நோக்கத்தை சிதைப்பதாக மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகக் கன்டோன்மென்ட் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர், பணியின் போதே உச்சக்கட்ட மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் அவர் நிலைதடுமாறி நின்றது அங்கிருந்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
காவலர் சதீஷ் போதையில் இருப்பதை ஊடகத்தினர் படம் பிடிக்கத் தொடங்கியதை அறிந்த சக போலீசார், உடனடியாக அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துச் சமரசம் பேசினர்.
பணியின் போது மது அருந்திவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டது மற்றும் காவல்துறையின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவித்த காரணத்திற்காக, காவலர் சதீஷை உடனடியாக பணியிடை நீக்கம் (Suspension) செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN