ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியின் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை
வேலூர், 25 டிசம்பர் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த கண்டிப்பேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (63). இவர் இந்திய கப்பல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசி
Vellore Gold Theft


வேலூர், 25 டிசம்பர் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த கண்டிப்பேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (63). இவர் இந்திய கப்பல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் விக்னேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

குணசேகரனுக்கு கண்டிப்பேடு பகுதியில் அருகே இரண்டு வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் குணசேகரன், அவரது மனைவி பத்மினி, மகன் விக்னேஷ் ஆகியோர் நேற்றிரவு உறங்கி கொண்டிருந்தனர். மற்றொரு வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அந்த வீட்டின் பின்பக்கமாக சென்று ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர், வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து, அதிலிருந்த 45 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இன்று காலை குணசேகரன் மற்றொரு வீட்டை திறந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருவலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவலம் போலீசார், சம்பவம் இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் இருந்த தடையங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர்? திருடர்கள் எப்படி தப்பி சென்றனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் காரணமாக, கண்டிப்பேடு பகுதி பொதுமக்களிடையே அச்சமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN