Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 டிசம்பர் (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று (டிச.25) அதிகாலை முதலே வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக குவிந்தனர்.
மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கூட்டம் அதிகளவில் இருந்ததால் வின்ச் ரயில் மற்றும் ரோப் காரில் செல்ல சுமார் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க நேரிட்டது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பழனி அடிவாரம், கிரிவலப் பாதையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தேவஸ்தான இலவச சுற்றுலா பேருந்து நிலையம், பழனி அடிவாரம், பூங்கா சாலை, அருள் ஜோதி வீதி, கொடைக்கானல் சாலை வாகனங்களால் நிரம்பி காணப்பட்டது. பக்தர்கள் வந்த வாகனங்களால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழனி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Hindusthan Samachar / vidya.b