Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்.
அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது.
ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம்.
ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.
விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர்.
அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது.
குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.
இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் இதற்குத் தானே இசையமைத்துள்ளார்.
பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.
ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளது.
ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை.
பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாக உள்ளது.
Hindusthan Samachar / Durai.J