Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், சில காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவான நிலையில், கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்து விட்டனர்.
மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயில்தார் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனுவில், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அமர்வு, நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பெரியபாளையம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN