Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 26 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வெள்ளையங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஆதியோகி சிவன் ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி நடைபெற உள்ள நிலையில் சிவ பக்தர்களிடையே விழிப்புணர்வு செய்யும் வகையில் ஆதியோகி சிவன் விழிப்புணர்வு பிரசார யாத்திரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதாக விளங்கும் பிரிதிவி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலிருந்து ஆதியோகி விழிப்புணர்வு பிரசார யாத்திரை தொடங்கியது.
மலர் மாலைகளால் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆதியோகி சிவன் சிலைக்கு காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞான பிரகாச தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து விழிப்புணர்வு பிரசார யாத்திரை வாகனத்தை வழி அனுப்பி வைத்தார்.
ஆதியோகி விழிப்புணர்வு பிரச்சார யாத்திரை வாகனம் காஞ்சிபுரம் நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பாடல் பெற்ற தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு மகா சிவராத்திரி குறித்து விழிப்புணர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு ஊடக விழிப்புணர்வு பொறுப்பாளர் ஜீவானந்தன் மாநில மகளிர் அணி காயத்ரி, மருத்துவர் நிஷா பிரியா, மனோஜ், மாலினி நேதாஜி மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்களும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு பிரசார யாத்திரை வாகனத்தில் சென்ற ஆதியோகி சிவனை வணங்கி வழிபட்டுச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN