Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 26 டிசம்பர் (ஹி.ச..)
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் அடித்து விரட்டுவதும், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துவதும், அவர்களை சிறை வைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையைச் சேர்ந்த தினேஷ், பாலமுருகன், ராமு, குணசேகரன் ஆகிய 4 மீனவர்கள் தங்களது பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள், தமிழக இலங்கை கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இலங்கை எல்லைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 தமிழக மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த மீனவர்களை விடுவிக்க கோரி அவரது குடும்பத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி, தமிழக அரசும் மீனவர்களை விடுவிக்க கோரி வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், சுமார் 53 நாட்களுக்குப் பிறகு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக அவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அங்கு நடைபெற்று விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கான அபராத தொகை இந்திய துணை தூதராக அதிகாரிகள் மூலம் செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் இலங்கை கடற்படையினர் 4 தமிழக மீனவர்களையும், தமிழக கடல் எல்லை பகுதியில், இந்திய கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அவர்கள் வேதாரண்யம் வட்டம், ஆறுகாட்டுத்துறைக்கு அழைத்து வரப்பட்டு கடலோர காவல் குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் போது, எல்லை தாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் வெகு நாட்களாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகின்றனர்.
இது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN