Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் செங்காரைக் கைது செய்தனர். தொடர்ந்து பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் மகளிர் அமைப்பினர் டெல்லி உயர்நீதிமன்றம் முன்பு இன்று (டிசம்பர் 26) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர் யோகிதா பயானா மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்,
எனது மகள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்ததால் உயர் நீதிமன்றத்துக்கு வந்து போராடுகிறேன். நான் ஒட்டுமொத்த உயர் நீதிமன்றத்தையும் குறை கூறவில்லை. மாறாக, எங்கள் நம்பிக்கையைச் சிதைத்த அந்த இரண்டு நீதிபதிகளை மட்டுமே குறை கூறுகிறேன்.
முன்னர் நீதிபதிகள் எங்கள் குடும்பத்துக்கு நீதி வழங்கினர். ஆனால், இப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி. எனக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று அவர் கூறினார்.
பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயர் நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்காருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குல்தீப் செங்காருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இன்னும் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த வழக்கு தொடர்பாக குல்தீப் செங்கார் தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b