இனி வரும் காலங்களில் எங்கள் சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் - பிரதமர் மோடி
புதுடெல்லி, 26 டிசம்பர் (ஹி.ச.) 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சீர்திருத்த
இனி வரும் காலங்களில் எங்கள் சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் - பிரதமர் மோடி


புதுடெல்லி, 26 டிசம்பர் (ஹி.ச.)

2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

சீர்திருத்தத்தின் உண்மையான பயன் அது மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறதா என்பதில்தான் உள்ளது. 2025 ஆம் ஆண்டு நிர்வாகத்தில் ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளை மையமாகக் கொள்ளாமல், விளைவுகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எளிமையான வரிச் சட்டங்கள், நவீன தொழிலாளர் சட்டங்கள் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவை குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடையே இருந்த தடைகளைக் குறைத்தன.

நம்பிக்கை, கணிப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வரிச் சலுகை கிடைத்துள்ளது.

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. நடுத்தர குடும்பங்கள் இப்போது தாங்கள் சம்பாதிப்பதில் அதிக பணத்தை தங்கள் கையில் வைத்திருக்க முடிகிறது. இது அவர்களுக்கு அதிக நம்பிக்கையுடன் செலவு செய்யவும், சேமிக்கவும், முதலீடு செய்யவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு இப்போது வருமானத்தை மட்டுமல்ல, சொத்துகளையும் உருவாக்குகிறது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் கிராம உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்பட்டதால், கிராமப்புற தொழிலாளர்கள் இப்போது சமூகங்களையும் வாழ்வாதாரங்களையும் வலுப்படுத்தும் நிரந்தர சொத்துக்களை உருவாக்குகிறார்கள்.

ஊதியம், பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் உறவுகளை உள்ளடக்கிய நான்கு தெளிவான குறியீடுகளாக 29 தொழிலாளர் சட்டங்கள் ளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் இனி பல்வேறு சட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. பெண்கள் உறுதிசெய்யப்பட்ட மகப்பேறு மற்றும் பணியிடப் பாதுகாப்பின் மூலம் பயனடைகிறார்கள், சீராக்கப்பட்ட வரி அடுக்குகள், எளிதான பதிவு நடைமுறைகள், தானியங்கி செயல்முறைகள் மற்றும் விரைவான பணப்பரிமாற்றங்கள் ஆகியவற்றுடன், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் வணிகம் எளிதாகி உள்ளது.

6.05 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான தீபாவளி விற்பனை மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற நவராத்திரி விற்பனை மூலம் இதன் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி இன்று

(டிசம்பர் 26) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

வாழ்க்கையை எளிதாக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது.

இனி வரும் காலங்களில் எங்கள் சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b