பாளையங்கோட்டையில் மதுபோதையில் காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது!
நெல்லை, 26 டிசம்பர் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் தங்கப்பராஜா, கார்த்திக் ராஜா (வயது 26) ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை அரியகுளம் விலக்கு பகுதி
Palayankottai Police Station


நெல்லை, 26 டிசம்பர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் தங்கப்பராஜா, கார்த்திக் ராஜா (வயது 26) ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை அரியகுளம் விலக்கு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பாளையங்கோட்டை நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த தங்கராஜா(48) மகன் பாலசந்தர்(28) என்பவர் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது பாலசந்தர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் அறிவுறுத்தினார். மேலும் பாலசந்தர் போலீஸ் நிலையத்துக்கு செல்வதை உறுதிப்படுத்திட அவரது ஆட்டோவில் ஆயுதப்படை போலீசான கார்த்திக்ராஜாவை பின்னால் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஆட்டோ புறப்பட்டு சென்ற நிலையில், பாலசந்தர் ஆட்டோவில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கு செல்லாமல் வேறு வழியாக தெற்கு அரியகுளம் பகுதிக்கு சென்றார். அதனை போலீஸ்காரர் கார்த்திக்ராஜா கண்டித்தும் போதையில் இருந்த பாலசந்தர் கண்டுகொள்ளாமல் ஆட்டோவை ஓட்டிச்சென்றார்.

ஒருகட்டத்தில் அவர் செல்போனில் தனது தந்தை தங்கராஜா, உடன்பிறந்த சகோதரர் கனகராஜ்(30) ஆகியோரை வரவழைத்தார். அவர்களும் தெற்கு அரியகுளம் வந்த நிலையில், 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் கார்த்திக்ராஜாவை சரமாரி அடித்து உதைத்தனர்.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஓடி வந்து போலீஸ்காரரை மீட்டனர். மேலும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வரவே தந்தை-2 மகன்கள் தப்பி ஓடினர்.

இதையடுத்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலசந்தரையும், கனகராஜையும் கைது செய்தனர்.

மேலும் தங்கராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர். மதுபோதையில் தந்தையும், 2 மகன்களும் சேர்ந்து போலீஸ்காரரை சரமாரி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN