Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
சுனாமி எனும் ஆழிப் பேரலை தாக்கியதன் 21-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சென்னை காசிமேடு கடற்கரையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் விதமாக ஃபைபர் படகில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடலில் சற்று தூரம் சென்று பால் ஊற்றி , மலர் தூவினார். ஃபைபர் படகை சிறிது தூரம் ஜெயகுமாரே ஓட்டிச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது;
பிரேமலதா பேட்டியை முழுமையாக பார்த்தேன் , அவர் மனவேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அவர் விடுத்த சாபம் திமுகவிற்கு தான் முழுமையாக பொருந்தும் . சபரீசனின் பென் நிறுவனம் தான் அரசியல் ஆதாயம் பெற தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக போலியான செய்தியை பரப்பியுள்ளனர்.
பிரேமலதாவின் சாபம் திமுகவை சும்மா விடாது. பென் நிறுவனம் கற்பனைக்கு எட்டாத கதைகளை அவிழ்த்து விடுகிறது.
திமுகவினர் அதிமுவிற்கு அமித்ஷா முதலாளி ஆகிவிட்டதாக கூறுவதாக கேட்கிறீர்கள்.
அதிமுகவின் முதலாளி எப்போதும் எம்ஜிஆர் தான்.
ஆட்சி முடியப்போகும் போது மாணவர்களுக்கு திமுக மடிக்கணினி கொடுப்பது சாகும்போது சங்கரா.. சங்கரா என்று கூறுவது போல் உள்ளது. அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே மடிக்கணினி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது கல்லூரி சென்றுவிட்ட நிலையில் வாக்களிக்கும் வயதை மனதில் வைத்து இப்போது மடிக்கணினி கொடுக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம். கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டபோது அங்கு செல்லாத முதலமைச்சர் தேர்தல் வருவதால் இப்போது செல்கிறார். தெனாலி படத்தில் வரும் கமல் எதை பார்த்தாலும் பயப்படுவது போல் உள்ளது ஸ்டாலினின் நிலை.
அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை , எடப்பாடி பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது என ஓ. பன்னீர் செல்வம் கூறியதாக கேட்கிறீர்கள் அவர் தனது கருத்தை கூறியுள்ளார். அவரை கூட்டணியில் இணைக்கலாமா வேண்டாமா என்பதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என நான் கூற முடியாது. அரசியலில் ஆயிரம் இருக்கும் , 4 சுவருக்குள் 4 விசயம் நடக்கும். அதை எப்போ சொல்லனுமோ அப்பபோதான் சொல்லுவோம்.
ஓபிஎஸ்- க்கு தொகுதிகளை வழங்குவது குறித்து பாஜக முடிவு செய்யும் என திரைக்கதை வசனம் அனைத்தும் ஊடகங்கள்தான் எழுதியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது அவசரப்பட வேண்டாம்.
கூட்டணி குறித்து 4 சுவருக்குள் நடக்கும் அந்தரங்க விசயங்களை வெளியில் கூற முடியாது. ஓ.பன்னீர் செல்வம் மீதான கோபம் குறைந்துள்ளதா என கேள்வி கேட்கும் நீங்கள் நேரில் வாருங்கள் போய் கேட்கலாம்.
அதிமுக தேர்தல் அறிக்கை பொருளாதார வளர்ச்சியை, வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்கும்.
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை இந்தியா மதசார்பற்ற நாடு வேற்றுமை , வேறுபாடு பார்க்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam