Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 26 டிசம்பர் (ஹி.ச.)
சபரிமலையில் நடப்பு மண்டல காலத்தின் நிறைவாக மண்டல பூஜை நாளை காலை நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி டிசம்பர் 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.
இன்று மதியம் இது பம்பை வந்தடைகிறது. பம்பையில் கணபதி கோயில் முன்புறம் தரிசனத்திற்கு வைக்கப்பட்ட பின் சன்னிதானம் கொண்டுவரப்படும்.
மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
நாளை நடைபெறும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.
தங்க அங்கி வருகையை ஒட்டி பக்தர்கள் சன்னிதானம் செல்வதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலை 9:00 மணிக்கு பின்னர் நிலக்கல்லில் இருந்தும், 10.00 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்தும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி இல்லை. அங்கி சன்னிதானம் வந்து சேர்ந்த பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
நிலக்கல்லிலிருந்து வாகனங்கள் வருவதிலும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்றும், நாளையும் ஆன்லைன் தரிசன முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்று 30 ஆயிரம் பேருக்கும் நாளை 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் 2000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM