Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 26 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின்
வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த
தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, கவசங்களை ஒப்படைத்த போது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது.
அதை செப்பனிட்ட பிறகு சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்த போது அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது 4.54 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே 2019 ஆம் ஆண்டு சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக அப்போதைய நிர்வாக அதிகாரி முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சஸ்பெண்ட் செய்தது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் பேத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் தேவசம் வாரிய நிர்வாக அதிகாரி எஸ்.சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் 400 கிராம் தங்கம் எடுத்து அதை கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து பல்லாரி வந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள்
தங்க வியாபாரி கோவர்தன் மற்றும் ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயலதிகாரி
பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைது செய்து திருவனவந்தபுரம் அழைத்து சென்றனர்.
தற்போது அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோடு அருகே உள்ள ராம்நகர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் எம் எஸ் மணி என்ற
பாலசுப்பிரமணியன் அலுவலகத்தில் தற்போது கேரளா SIT போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக கேரளா துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ் சுரேஷ்பாபு தலைமையிலான
போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam