Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இன்று
(டிசம்பர் 26) வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், எட்டயபுரம் நெடுஞ்சாலை, எஸ்.குமாரபுரம் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று (25.12.2025) மாலை சுமார் 4.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பாதயாத்திரிகள் மீது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திருச்செந்தூர், வீரபாண்டி பட்டணத்தைச் சேர்ந்த சுந்தர ராணி (வயது 60) க/பெ.ராமமூர்த்தி, இசக்கியம்மாள் (வயது 55) க/பெ.வடிவேல் மற்றும் கீழ திருச்செந்தூர், கரம்பாவிளையைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 55) க/பெ.சுந்தரம் ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b