Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 டிசம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில், சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ள இந்த நிலையத்திற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரைச் சூட்ட நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' எனப் பெயரிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தி.மு.க அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரே வைக்கப்பட்டிருந்தது. புதிய இடத்திற்கு மாற்றினாலும், பழைய பெயரையே தொடர்வதுதான் அரசியல் மரபு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடலூர் எம்பி விஷ்ணுபிரசாத் இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டிய செல்வப்பெருந்தகை, இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேருவின் மகளே வருக என அன்று கருணாநிதியால் வரவேற்கப்பட்ட இந்திரா காந்தியின் பெருமையைப் போற்றும் வகையில் இந்தப் பெயர் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. காங்கிரஸுக்குக் குறைந்த இடங்களே ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு நிலவும் சூழலில், திண்டிவனம் பேருந்து நிலையப் பெயர் விவகாரம் இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN