திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் தேவஸ்தானம் போர்டு எடுத்த அதிரடி முடிவு..!
ஆந்திரா, 26 டிசம்பர் (ஹி.ச.) கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இதன் காரணமாக கட்டணமில்லா பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் குறைந்தபட்சம் 2
திருப்பதி ஏழுமலையான் கோவில்


ஆந்திரா, 26 டிசம்பர் (ஹி.ச.)

கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

இதன் காரணமாக கட்டணமில்லா பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் குறைந்தபட்சம் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் இரண்டும் நிரம்பி வழிகின்றன. அதில் இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால் எடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுக்கிறது.

இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், 10,500 ரூபாய் கட்டண தரிசனத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திருமலையில் உள்ள கவுண்டர்கள், ரேணிகுண்டா விமான நிலையத்தில் உள்ள கவுண்டர் ஆகியவற்றில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் விற்பனை இம்மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam