Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி திறந்து வைத்தார். சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது.
இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.
விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியகக் கண்காட்சியை பொதுமக்கள் இன்று (டிசம்பர் 26) முதல் பார்வையிடலாம். விக்டோரியா பொது அரங்கத்தினைப் பொதுமக்கள் பார்வையிட சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக (https://chennaicorporation.gov.in/gcc/) VICTORIA PUBLIC HALL என்பதைத் தேர்வு செய்து கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம்.
முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தினைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர். காலை 8.30 மணிக்கு வழிகாட்டியுடன் பார்வை நேரம் தொடங்கி, மாலை 6.30 மணிக்கு நிறைவடைகிறது. ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனை, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட பின்னர் நிகழ்ச்சியின் நோக்கம் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b