Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரஜோதி தரிசன காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடியுடன் சென்று தரிசித்து வருவது வழக்கம்.
சமீபகாலமாக ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் விமானப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அவர்கள் கொச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
கொச்சி விமானத்தில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது ‘சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம்’ என்று இந்திய விமானநிலைய ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது.
இதனால் சென்னை-கொச்சி-சென்னை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகளின் கூட்டம், குறிப்பாக ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் பயண கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
வழக்கமாக, சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ.3,681 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் பயண கட்டணம் 3 மடங்குக்கு மேல் உயர்ந்து, ரூ.10,500ல் துவங்கி ரூ.11,500 வரை வசூலிக்கப்படுகிறது.
அதிலும், சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்லும் நேரடி விமானங்களில் மட்டுமே இக்கட்டணம். இதுதவிர, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக கொச்சிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற சபரிமலை சீசன் காலங்களில், சென்னையில் இருந்து கொச்சிக்கு கூடுதல் நேரடி விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, கடந்தாண்டு சென்னை-கொச்சி இடையே சபரிமலை சீசன் காலங்களில் நாள்தோறும் வருகை, புறப்பாடு என மொத்தம் 18 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது, இந்தாண்டு சென்னை-கொச்சி இடையே நேரடி விமான சேவைகளாக மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 4 நேரடி விமான சேவை குறைவினாலும், கட்டண அதிகரிப்பினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தாண்டு சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்வதற்கு சிறப்பு அனுமதி அளித்துள்ள இந்திய விமானநிலைய ஆணையம், அவர்களின் வசதிக்காக சபரிமலை சீசன் முடியும்வரை சென்னையில் இருந்து கொச்சிக்கு கூடுதல் நேரடி விமான சேவைகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் வலியுறுத்துகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b