Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 டிசம்பர் (ஹி.ச.)
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் அகா்பத்தி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நடைபெறுகிறது.
அகா்பத்திக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், அதில் தடை செய்யப்பட்ட, உடல்நலனைப் பாதிக்கும் ரசாயனங்களைச் சோ்ப்பதும் அதிகம் நிகழ்வதாகப் புகாா்கள் எழுந்தது.
இதையடுத்து, நுகா்வோா் நலன், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்திய தர நிா்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் தரத்தைப் பின்பற்றி தயாரிக்கப்படும் அகா்பத்திகளைப் பயன்படுத்தும் இடங்களில் காற்றின் தரம் பாதிக்கப்படாது, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது, சா்வதேச அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சில செயற்கை நறுமணப் பொருள்கள், வேதிப்பொருள்கள் அதில் இடம் பெறாது.
இதன்மூலம் சா்வதேச அளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அகா்பத்திகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
பிஐஎஸ் அறிவித்துள்ள தரத்தைப் பின்பற்றி தயாரிக்கப்படும் அகா்பத்திகளுக்கு ‘ஐஎஸ் 19412:2025’ என்ற குறியீடு வழங்கப்படும்.
இதன் மூலம் பொதுமக்கள் அதன் தரத்தைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தலாம் என்று நுகா்வோா் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அலித்ரீன், பொ்மெத்ரீன், சைபா்மெத்ரீன், டெல்டாமெத்ரீன், ஃபிரோனில் ஆகியவற்றை வேதிப்பொருள்களை அகா்பத்திகளில் பயன்படுத்தக் கூடாது.
மேலும், செயற்கை நறுமணங்களான பென்சைல் சயனைடு, எத்தில் அக்ரிலேட், டைபினைலமைன் உள்ளிட்டவற்றை சோ்க்கக் கூடாது.
புதிய தர நிா்ணயத்தின்படி அகா்பத்திகள் இயந்திரங்களால் தயாரிக்கப்பட்டவை, கைகளால் தயாரிக்கப்பட்டவை, பராம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டவை என வகைப்படுத்தப்படுகின்றன.
இந்திய அகா்பத்தி சந்தையின் ஆண்டு மதிப்பு ரூ.8,000 கோடியாக உள்ளது.
இது தவிர அமெரிக்கா, மலேசியா, நைஜீரியா, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 150 நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1,200 கோடிக்கு அகா்பத்தி ஏற்றுமதியாகிறது.
குடிசைத் தொழிலில் தொடங்கி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சில பெரு நிறுவனங்களும் அகா்பத்தி தயாரிப்பில் உள்ளன. பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதிலும் அகா்பத்தி தயாரிப்பு முன்னிலை வகிக்கிறது.
பாரம்பரிய கைவினைக் கலைஞா்களும் இத்துறை சாா்ந்த பணிகளில் அதிகம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
Hindusthan Samachar / JANAKI RAM