Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 27 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி டிசம்பர் 29-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.
கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் இரட்டை குளம்புகள் கொண்ட கலப்பின கால்நடைகளை தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும்.
இந்த நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத் தட்டுகள், தண்ணீர், வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமும் பரவும் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.
மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். தீவனம் உட்கொள்ளாது மந்த நிலையில் இருக்கும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி பின்பு அவை உடைந்து ரணமாகி மாறும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத் தன்மையும், ரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்கவிடக் கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.
இந்த நோய் தாக்குதலினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது குறைகிறது. இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது.
எனவே கால்நடை வளர்ப்போர் இந்த தருணத்தை பயன்படுத்தி எந்தவித விடுபாடுமின்றி தங்கள் கால்நடைகளுக்கு காதுவில்லைகள் அணிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b