Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டப் பஞ்சாயத்து செய்து தீர்க்க வந்த சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
இப்படி எந்தவொரு அதிகாரமும் நாகரிகமுமின்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொடங்கி பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் காமுகர்கள் வரை அனைத்து உடன்பிறப்புகளையும் ஆளுங்கட்சி திமிரை ஊட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுகவின் திராவிட மாடலா? ஆமாம், பொது மேடையில் வைத்தே அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டே பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? ரவுடிகளை மட்டும் தான் வளர்த்துவிடும்.
இத்தகைய கருப்பு சிவப்புப் படையைக் கைக்குள் வைத்துக்கொண்டு, தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முழங்குவது வெட்கக்கேடு.
தாங்கள் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து உடனடியாக, அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரைத் தாக்கிய கார் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிய உத்தரவிடுங்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ