பல்லாண்டு காலமாக மண்ணுக்குள் புதைந்திருந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் மீட்பு
விழுப்புரம், 27 டிசம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஏமப்பூர். இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகே கொற்றவை சிற்பம் ஒன்று காணப்பட்டது. 8 கரங்களுடன் ஆயுதங்களை ஏந்
Kottravai Sirpam


விழுப்புரம், 27 டிசம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஏமப்பூர். இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு அருகே கொற்றவை சிற்பம் ஒன்று காணப்பட்டது. 8 கரங்களுடன் ஆயுதங்களை ஏந்தி கம்பீரமாக காட்சி அளிக்கும் இக்கொற்றவை மிகப்பெரிய எருமைத் தலைமீது நின்றிருக்கிறாள்.

இந்தச் சிற்பம் பல்லவர் காலத்தைச் (கி.பி.8-9ஆம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கொற்றவை சிற்பம் மண்ணில் புதைந்த நிலையில் இருந்து வந்தது. சிறுவர்கள் இதன் மீது ஏறி விளையாடி வந்தனர். அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய சாணக்கழிவுகள் சூழ்ந்து மிகவும் பரிதாபமான சூழலில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது.

இந்நிலையில் கிராம மக்களின் முயற்சியால் அண்மையில் ‌இந்த சிற்பம் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தற்போது கான்கிரீட்டால் ஆன பெரிய மேடை அமைக்கப்பட்டு அதன் மீது சிற்பம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. கொற்றவைக்குத் தற்போது பூஜைகள் தவறாமல் நடந்து வருகின்றன. முன்பு வழிபாடு எதுவுமின்றி வெளிறிப் போய் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த கொற்றவை சிற்பம் தொடர் எண்ணெய் பூச்சு வழிபாட்டின் காரணமாக தற்போது கரிய நிறத்தில் பளிச்சென்று தெரிகிறது.

ஏமப்பூர் கிராம மக்களின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபற்றி விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறுகையில், ஏமப்பூர் கிராமத்தில் பல்லாண்டு காலம் மண்ணுக்குள் புதைந்திருந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் தற்போது மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வானூர் அருகே கரசானூர், விழுப்புரம் அருகே வெங்கந்தூர், வேடம்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் கொற்றவை சிற்பங்கள் ஏரி தண்ணீருக்குள் மூழ்கியும் மண்ணுக்குள் புதைந்தும் காணப்படுகின்றன.

சாமி மேலே வந்தால் கெட்டது நடக்கும் எனும் தவறான அச்சம் அப்பகுதியினர் மத்தியில் நிலவியது. தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தால் சாமிக்கு ஆகாது என்று சிற்பங்களை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர்.

கொற்றவை சிற்பங்கள் தமிழர்களின் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கலை, வழிபாட்டு சின்னங்கள் ஆகும். அழிவின் விளிம்பில் இருந்து இவை மீட்டெடுக்கப்பட்டு வழிபாட்டிற்குக் கொண்டு வந்து உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டியவை.

இதை சரியாக செய்திருக்கும் ஏமப்பூர் கிராம மக்களின் நடவடிக்கை வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரியது.

பழமை வாய்ந்த சிற்பங்கள் குறித்து தவறான நம்பிக்கை, அச்சத்தில் உள்ள பலருக்கும் இந்த நடவடிக்கை நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN