Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குண்டாடா பகுதியைச் சேர்ந்த செல்வன் (50), சதீஸ் (40) உள்ளிட்டோர் இன்று காலை அப்பகுதியில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கிணறு தோண்டும் பணியில் இரு தொழிலாளர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது கிணற்றின் மேல் பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் மீது மண் விழுந்துள்ளது.
அருகில் இருந்த பணியாளர்கள் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்க முடியாமல் திணறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற கோத்தகிரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, கிணற்றுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது.
இறந்தவர்களின் உடல் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மண் சரிவில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
கிணறு தோண்டும் பணிக்கு உரிய அனுமதி பெறப்பட்டதா? என்பது சந்தேகமாக உள்ளது. மேலும் பரிதாபமாக உயிரிழந்த பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN